கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால், தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளும், 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் வகையில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கரோனா தொற்று முடிவுக்கு வராத நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: பணமதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் - அசோக் கெலாட்