சென்னை: துணை மருத்துவ படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, உள்ளிட்ட 17 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் கூறுகையில், "துணை மருத்துவப் படிப்புகள் எனப்படும் பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. அரசு கல்லூரியில் 1580 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 11 ஆயிரத்து 600 இடங்களும் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் அரசு கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரியில் 6871 இடங்களும், பி.பார்ம் படிப்பில் அரசு கல்லூரியில் 120 இடங்களும் ,தனியார் கல்லூரியில் 3413 இடங்களும், பிபிடி படிப்பில் அரசு கல்லூரியில் 50 இடங்களும் தனியார் கல்லூரியில் ஆயிரத்து 176 இடங்களும் உள்ளன.
இந்தப் படிப்பிற்கு 37 ஆயிரத்து 334 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்றுக்கு பத்தாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு 14ஆம் தேதி வழங்கப்படும். 15ஆம் தேதி ஒதுக்கீடு ஆணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 18ஆம் தேதிக்குள் அவர்கள் கல்லூரியில் சேர வேண்டும்.
இதுபோன்று ஒவ்வொரு சுற்று கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் www.tnhealth.tn.gov.in, tn medical selection.net என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.