சென்னை: மயிலாப்பூர் பக்தவத்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பத்மஜா தேவி (82) என்ற மூதாட்டி வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு (ஆகஸ்ட் 3) பத்மஜா துவைத்த துணிகளை உலரவைக்க வீட்டின் பால்கனிக்குச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய மூதாட்டி சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் மூதாட்டி முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்ததையடுத்து, மயிலாப்பூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அவ்விடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கூல் டிரிங்க்ஸ் குடித்த சிறுமி மரணம் - போலீஸ் விசாரணை!