சென்னை: தண்டையார்பேட்டை பரமேஸ்வரி பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் சேமிப்பு கிடங்கு சேகரிப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, லாரியின் மூலம் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.27) வழக்கம் போல அங்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்தனால் உள்ளிட்ட ஆயில் கசிவுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கில் இருந்த பாய்லர் டேங்க் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதை சரி செய்வதற்காக கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள், சரவணன் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வெல்டிங் இயந்திரம் மூலம் சரிசெய்து கொண்டிருந்தபோது கசிவு ஏற்பட்டு, பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள், காயமடைந்த இரண்டு ஊழியர்களையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பாய்லர் டேங்க் வெடித்த சத்தம் கேட்டதில் வெளியிலிருந்த பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராயப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்துள்ளனர்.
இவ்வாறு தீ விபத்து ஏற்பட்ட பாய்லர் டேங்கில் எண்ணெய் கழிவுகள் எதுவும் இல்லை என்றும், அதன் அருகே இருந்த கழிவுகளில்தான் தீப்பிடித்து எரிந்ததாகவும் தீயணைப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பெருமாள் என்கிற ஊழியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சரவணன் என்ற மற்றொரு ஊழியர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் முன் அனுபவம் உடையவர்களா, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பெருமாள் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பாய்லர் டேங்கில் எவ்வாறு கசிவு ஏற்பட்டது குறித்து நிறுவனத்தின் அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு!