சென்னை: தென் ஆப்பிரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சொந்த ஊர் திரும்புவதற்காக விமானத்தில் சென்னை விமான நிலைய வந்த போது ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மாட்டின் லூதர்(47). இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சாலமோன் மார்ட்டின் லூதர், தனது சொந்த ஊர் திரும்புவதற்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தின் மூலம் சென்னை வந்து அங்கிருந்து சொந்த ஊரான சித்தூர் செல்ல முடிவு செய்து உள்ளார். அதன்படி சாலமோன் மார்ட்டின் லூதர், மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் விமானத்தில் இருந்து வெளியில் வந்த அவர், ஏரோ பிரிட்ஜ் வழியாக தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்து உள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதைக் கண்டு சக பயணிகள் பரபரப்படைந்துள்ளனர். பின்னர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த தகவலின் அடிப்படையில் உடனே சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பரிசோதனை நடத்தினர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினர்கள் கூறுகையில், திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாக தான் சாலமோன் மாட்டின் லூதர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார், உள்நாட்டு விமான முனையத்திற்கு, விரைந்து வந்து, சாலமோன் மார்ட்டின் லூதர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் சொந்த ஊர் திரும்புவதற்காக, மும்பை வழியாக சென்னை வந்த போது விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சூரி பிறந்தநாள்: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு 2.5 கிராம் தங்க மோதிரம்!