காயிதே மில்லத் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சார்பாக, அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக செயல்பட்டவர்களுக்கு, 'காயிதே மில்லத் நேர்மைக்கான விருதை' கல்லூரி நிறுவனம் இந்த ஆண்டு வழங்கியது. அவ்விருதினை விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ”சமூக ரீதியான அரசியல் பிரச்னைகளில், மதம் சார்ந்து மக்களை பிளவுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மதம் என்பது அரசியல் சாராதது, அதன்மூலம் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். ஒரு காலத்தில் பிரிவினைவாதம் என்றால் தேசப் பிரிவினைவாதத்தைத் தான் கூறுவதுண்டு”, என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு தேசத்தை மொழி, மதம் அடிப்படையில் பார்த்து இனவாதம் பேசக்கூடாது. இன்றைக்கு பிரிவினைவாதம் என்பது எவ்வாறு பரிணாமம் பெற்றுள்ளது என்றால் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிளவுப்படுத்தி காட்டுகிறது. இதை செய்யக்கூடிய அமைப்பினர் சங்கபரிவார் அமைப்புகளை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மக்கள் எப்போதும் சாதி, மதம் அடிப்படையில் பிளவுபட்டிருக்க வேண்டும், என்று எண்ணுகிறார்கள். அப்போதுதான் தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்”, என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மண்ணில் இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் பிளவுபட்டு இருக்கவேண்டுமென்று அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்றும், ’ஒரே தேசம் ஒரே கலாசாரம்’ என்ற ஆபத்தான வழக்கத்தை, இன்னும் நாம் உணராமல் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.