சென்னை: கே.கே.நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரமேஷ் என்ற முண்டகட்டி ரமேஷ் (40). விசிகவில் உறுப்பினராக உள்ள ரவுடி ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரவுடி ரமேஷ் மீது, கோடம்பாக்கம், எம்கேபி நகர், எம்ஜிஆர் நகர், கேகே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல இன்று காலை 8 மணியளவில் ரவுடி ரமேஷ் கே.கே.நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள பெட்டிக் கடையில் டீ குடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் ஒன்று ரவுடி ரமேஷை பெட்டிக் கடை வாசலில் வைத்து கொலை முயற்சி செய்துள்ளனர். அதை அறிந்த ரமேஷ் தப்பிச் செல்ல முன்ற போது அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிவிட்டு அதே காரில் ஏறி தப்பிச்சென்றது.
இந்த தாக்குதலில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொழில் போட்டியில் இந்த படுகொலையானது நிகழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறின் காரணமாக விசிக பிரமுகர் அதிஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள் மேலும் ஒரு விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.