சென்னை: சென்னை அடுத்த மேல்மருவத்தூரில், விலை உயர்ந்த உலோகச் சிலையைக் கடத்த முயற்சிப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மேல்மருவத்தூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் மேல்மருவத்தூர் - சித்தாமூர் சந்திப்பில் சிலையோடு காத்திருந்த கடத்தல் கும்பலிடம் பேரம் பேசுவதுபோல் நடித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிலை கடத்தல் தொடர்பாக வேலூரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து ஒரு மீனாட்சி அம்மன் உலோக சிலை, ரிஷப தேவர் சிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணர் சிலை மீட்பு
விசாரணையில் கடத்தல் கும்பல் ஒரு கோடி ரூபாய் வரை சிலைகளுக்கு பேரம் பேசியதும் தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிலை கடத்தல் கும்பலிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்தக் கும்பல் கிருஷ்ணர் சிலை ஒன்றை ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிலையையும் நேற்று (அக்.24) பறிமுதல் செய்தனர். இந்தச் சிலை சுமார் 175 கிராம் எடையும், 8 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாகவுள்ளது. மேலும் சிலையின் இடது கை, இடது கால் ஆகியவை அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. சிலை கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தந்தங்களுக்காக கொல்லப்பட்ட யானை?