சென்னை: உலகளவில் மண் அரிப்பு என்பது பலராலும் இயற்கையின் நிகழ்வாகக் கருதப்பட்டாலும், தற்போதைய காலகட்டங்களில் நிகழும் மண் அரிப்பிற்கு மனித செயல்களே பெரும்பான்மையான காரணமாக அமைகிறது.
முன்பெல்லாம் ஏற்படும் மண் அரிப்பிற்கு ஏற்றாற் போல புதிய மண் உருவாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதோ மணல் கொள்ளை, மலட்டுத்தன்மையில் மண் என மக்களின் செயல்பாடுகள் இயற்கையை அச்சுறுத்திவருகின்றன.
அதுமட்டுமின்றி, சமீப காலங்களில் நிலத்திடி நீரின் மட்டம் தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு உலக வெப்பமயமாதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும் இதிலும் மனிதர்களின் செயல்கள் அதிகம் என்றே தெரிகிறது.
இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் பொருட்டு பல்வேறு தன்னார்வலர்கள் தங்களாலான வகையில், மரங்களை நடுதல், மண்ணையும், நிலத்தடி நீரை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காக்கை அறக்கட்டளையினர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பனைவிதைகளை விதைத்து மக்களிடையே மண் அரிப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர்.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனைவிதைகளை நட்டுவரும் இவர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நாளை (செப் 27) காலை எட்டு மணி முதல் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகே அமைந்துள்ள பனையூரில் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
வருங்கால தலைமுறைகள் செழித்து வளர சமூக ஆர்வலர்களின் இந்த முயற்சிக்கு நம்மால் முடிந்த உதவிகளை அளிப்போம்...