சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் சேவிகா (39). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்த நாளையொட்டி சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது தாயார் இல்லத்திற்கு வாழ்த்து பெறுவதற்காக பைக் டாக்ஸி சேவை அழைத்து, அதில் வரும் ராபிடோவை புக் செய்து பயணம் செய்துள்ளார்.
தேனாம்பேட்டை மூப்பனார் பாலம் அருகே ரேபிடோ இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேவிகா நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை காவல் துறையினர் சேவிகா உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து நடக்க காரணமாக இருந்த வாகனத்தையும் அதன் ஒட்டுநரையும் தேடி வருகின்றனர். அதேசமயம் சேவிகாவை அழைத்துச் சென்ற பைக் டாக்ஸி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்த நிலையில், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விபத்து நடக்க காரணமாக இருந்த வாகனத்தை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக பைக் டாக்ஸி சேவையை அளித்து வரும் ரேபிடோவை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பிறந்தநாள் அன்று வாழ்த்து பெறுவதற்காக ரேபிடோவில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Kerala Boat Accident: கேரள படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்வு!