சென்னை: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது இலங்கையைச்சேர்ந்த (28) வயது ஆண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அந்த இலங்கை பயணி முன்னுக்குப்பின் முரணாகப்பேசினார். இதையடுத்து சந்தேகத்தில் அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை இட்டனர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட் கேஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சூட்கேஸை முழுமையாக ஆய்வு செய்தனர். அந்த சூட்கேஸ் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த ரப்பர் பீடிங்கை பிரித்து பார்த்த போது, அதில் ஸ்ப்ரிங் கம்பி போன்று தங்க வயர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த தங்க வயா்கள் மொத்தம் ஒரு கிலோ 38 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.46.5 லட்சம் ஆகும்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்க ஸ்பிரிங் வயரை பறிமுதல் செய்தனர். அதோடு இலங்கை பயணியையும் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பண்ணாரி சோதனை சாவடி வழியாக கடத்த முயன்ற 2 டன் குட்கா பறிமுதல்!!