சென்னையில் பிரபல தனியார் உணவக உரிமையாளர் பொன்னுச்சாமி என்பவர் நேற்று (அக்.22) அடையாறு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தான் நாளிதழ் ஒன்றில் கண்ட வட்டியில்லா கடன் விளம்பரத்தையடுத்து சுரேஷ்(43) என்பவரை தொடர்புகொண்டு பேசினேன். தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அவரைக் காண சென்றபோது, அவர் தனக்கு தெரிந்தவர்கள் பெரிய பணக்காரர்களுக்கு பினாமிகளாக உள்ளனர். அவர்களிடம் உள்ள பலகோடி மதிப்பில் கருப்பு பண எப்போது வேண்டுமானாலும் வட்டியில்லாதக் கடனாகப் பெறலாம்.
தற்போது உனக்கு தொழில் செய்வதற்காக தேவையான ரு.4 கோடியை வட்டியில்லாமல் நான் பெற்று தருகிறேன் என வாக்குறுதியளித்ததோடு அந்த அறையில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த பணத்தையும் காட்டினார். ஆனால், பெறும் ஆறு மாதங்களில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி திருப்பி தர வேண்டும் எனவும், பணம் வாங்கும் முன் அதற்கான அக்ரீமெண்ட் செலவுகளுக்காக மட்டும் முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனக்கூறி தன்னை நம்பவைத்ததுடன் அடையாறு சிக்னல் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு தன்னை நேரில் வரவழைத்து அங்கு வைத்து தன்னிடம் அக்ரீமெண்ட் செலவுக்கான ரூ.5 லட்சம் முன்பணத்தை பெற்றுச் சென்றார். அதன்பின் ஏமாற்றி விட்டார். ஆகவே தலைமறைவாகிய சுரேஷை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பல குற்றப்பின்னணியில் தொடர்பு: அதனடிப்படையில் மோசடி வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் தனிப்படை அமைத்து பொன்னுசாமியிடம், சுரேஷ் பணம் பெற்றுச் சென்றதாக கூறப்படும் அடையாறு சிக்னல் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ், ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் வழக்கில் கோவை பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டு பின் வெளியே வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோவை விரைந்த தனிப்படை போலீசார் கோவை அன்னூர் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ்குமார் என்பவனை சுற்றி வளைத்து கைது செய்து அவனை சென்னை அழைத்து வந்தனர்.
மோசடி செய்யும் தொழிலுக்கு குரு: அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் இருந்தபோது தன்னுடன் செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான தனிக்கொடி என்ற குற்றவாளி மூலம் மோசடிகளை கற்றுகொண்டதாகவும், தான் செய்துவரும் மோசடி தொழிலுக்கு தனிக்கொடி தான் குரு எனவும் சுரேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனியார் உணவக உரிமையாளர்போல, பலரை சுரேஷ் குமார் நாளிதழ் விளம்பரம் மூலம் மோசடி செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் விளையாடும் டம்மி நோட்டுகள்: குறிப்பாக, சுரேஷ் கவரிங் செயின்கள் பல அணிந்து, சொகுசுக் கார்களில் வலம் வருவதாலும், நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்துத் தங்கி பந்தா காட்டுவதாலும் அவர் கூறுவது அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நம்ப வைத்துவிடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகள் விளையாடும் ரூ.500 நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்துக்கொண்டு அதன் மேல் 2 உண்மையான ரூ.500 நோட்டுகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னிடம் அதிக பணம் உள்ளதாக சுரேஷ் ஏமாற்றியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷிடம் இருந்து 14 செல்போன்கள், கட்டுக்கட்டான குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டு, கவரிங் தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சுரேஷை அடையாறு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக உள்ள பிரச்சனை 100 நாளில் தீர்க்க இயலாது - பிரதமர்