சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவப்பட்ட நாள் ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நிறுவன நாளை முன்னிட்டு க்யூஆர் கோட் பயணச்சீட்டுகளில் 5 ரூபாய் கட்டணத்தில் ஒருவழிப் பயணம் மேற்கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3 (ஞாயிறு) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த க்யூஆர் கோடுகளை வைத்து, பே.டி.எம்(paytm), வாட்ஸ்அப் பே(whatsapp), ஃபோன்பே(phonepe) ஆகிய மூன்று செயலிகளில் பயண்ச்சீட்டுகள் எடுத்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் (manual paper ticket) ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகை பொருந்தாது. மேலும், இந்த சலுகையானது நிறுவனத் தினத்திற்கும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் வழங்கும் திட்டமாகும்" எனத் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் ரயில் தற்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் (ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக), சென்னை சென்டரல் முதல் பரங்கிமலை மற்றும் விமான நிலையம் வரை (அண்ணாநகர், கோயம்பேடு, வழியாக) வரையிலும் இயக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்சம் கட்டணமாக 10 ரூபாயும், அதிகபட்சமாக 50 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ், மற்றும் பே.டி.எம்., வாட்ஸ்அப், ஃபோன்பே ஆகிய பயணச்சீட்டில் பயணித்தால் 20% சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் முறைகேடா? சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!