சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் கலந்துகொள்ள 115க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச்த்தை சேர்ந்த 11 பேர் தேர்வாகியுள்ளனர்.
400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தேர்வான நாகநாதன் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ஆவார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகநாதன் பாண்டி கடந்த 2017ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டின் கீழ் ஆயுதப்படை காவல்துறையில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவரான நாகநாதனுக்கு சென்னை உயர் அலுவலர்கள் விளையாட்டில் சாதிப்பதற்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும், பல்வேறு மாநிலப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் நாகநாதன் வாங்கியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான நாகநாதனின் பெற்றோரை வரவழைத்து தமிழ்நாடு டிஜிபி பாராட்டுகளையும், சிறப்பு உதவிகளையும் வழங்கியுள்ளார்.
நாகநாதன் காவல்துறையில் சேர்ந்த பின்னர் ஓட்டப்பந்தயத்தை தொடர காரணமாக இருந்தவர் பயிற்சியாளரும், ஆயுதப்படை காவலருமான பிரபாகரன். நாகநாதனுக்கு அவர் தொடர் பயற்சிகளை அளித்து வந்துள்ளார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக பிற மாநிலத்தில் நடந்த தடகள போட்டியில் நாகநாதனை ஊக்குவித்து கலந்து கொள்ள வைத்தவர் அவர்தான். இதன் காரணமாக நாதநாதன் இந்திய காவல்துறை போட்டியில் 4x400 பிரிவில் தடகளப்பந்தயத்தில் முதலிடம், மாநில அளவில் 46.61 நொடிகளில் பந்தய தூரம் கடந்து தங்க பதக்கம், கிரான்ஃபிக்ஸ் போட்டியில் தங்க பதக்கம், பெடரேசன் கோப்பையில் வெள்ளி பதக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் போட்டியில் தங்க பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.
நாகநாதனை ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற செய்வதற்காக கடின பயிற்சி அளித்த அவரது பயிற்சியாளர் பிரபாகரன், ஒலிம்பிக் தடகளப்போட்டியில் நாகநாதன் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆயுதப்படை விளையாட்டு துறையில் உள்ள காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர், மாணவ, மாணவியருக்கு பிரபாகரன் இலவசமாக பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாடும் மோடி!