சென்னை: தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2021-22 ஆண்டுகளுக்கான ஓபிசி 27 விழுக்காடு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்குவருகிறது. இது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே செய்ய முடியும்.
பாரதிய ஜனதா ஆட்சியில் உண்மையான சமூக நீதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இந்த ஒதுக்கீட்டு விவகாரத்தில் பயந்துகொண்டிருந்தது. மேலோட்டமாக நான்கு ஐந்து கல்லூரிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். ஆனால் பாஜக அரசு முழுமையாகக் கொண்டுவந்துள்ளது.
- அகில இந்திய சேர்க்கை மூலம் ஐந்தாயிரத்து 500 தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர். மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, திமுகவை எதிர்த்து பாஜக மீனவர் அணி சார்பில் நாளை (ஜூலை 30) வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும்.
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசை எதிர்த்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5 காலை 9 மணிக்கு 10 ஆயிரம் விவசாயிகளுடன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த இருக்கிறோம். மேகதாது பற்றி கர்நாடக முதலமைச்சரின் பேச்சு தவறனது.
மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம், தமிழ்நாட்டு விவசாயிகளை அச்சமூட்டவே இவ்வாறு கூறியுள்ளார். அணைக்கட்ட முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதை மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
- மேகதாதுவில் அணைக்கட்ட ஒரு செங்கல்கூட வைக்க முடியாது.
அதனை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது. பாஜக மாநில கட்சியினர் தேசியம் பற்றி சிந்திப்பதால் தேசியக்கட்சியாகத் தெரிகின்றோம். தமிழ்நாடு விவசாயிகளுக்கு, தமிழ்நாடு பாஜக துணைநிற்கும்" என்றார்.
கீழடி அகழாய்வுகள் தேவையில்லை எனப் பேசுபொருளாக இருப்பது பற்றி கேட்டபோது, அகழாய்வு செய்வது தேவையானது, அப்போதுதான் நம் வரலாறுகளை வருங்காலத்தினர் தெரிந்துகொள்ள முடியும் என பதிலளித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று உறுதிபட கூறினார்.