சென்னை: தமிழ்நாட்டில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 329 ஆக இருந்த நிலையில், 2022ம் ஆண்டில் 406 என அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 1,505 பேரை, பாம்பு கடித்ததில் 55 பேர் இறந்துள்ளனர். கோயம்புத்தூரில் 1,499 பேரை பாம்பு கடித்ததில், சிகிச்சை பலனின்றி 63 பேர் இறந்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு, வாழ்விடங்களின் எல்லை விரிவாக்கம் போன்றவற்றினால் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் வாழ்விடமான புதர் போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நீர்நிலை கரையோரங்கள், வனப்பகுதிகள், மலையடிவார பகுதிகளில் மக்கள் வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.
விலங்குகள் வாழ்வதற்கான இடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதை அறியாத விலங்குகள் ஏற்கனவே அவைகள் வாழ்ந்து பழகிய பகுதிகளுக்கே வருகின்றன. ஆனால் அங்கு வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால், மனிதர்கள் நடமாட்டம் கண்டும் அச்சமடையும் பாம்பு போன்ற விலங்குகள் அச்சத்தில் பாதுகாப்பிற்காக மனிதர்களை தாக்குகின்றன.
இவ்வாறு பாம்பு அச்சத்தால் கடிப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும், அதற்கான சிகிச்சை அளிப்பதற்குள் விஷம் ஏறி இறக்கின்றனர். இதனால், பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கிட்டத்தட்ட 250க்கு மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 மட்டுமே விஷத்தன்மை கொண்டவையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு , சுருட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே மனிதர்களை கொல்லக்கூடிய விஷத்தன்மை கொண்டவைகளாக உள்ளன. தேசிய சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் பாம்புகள் கடித்து அதிகம் பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்திருக்கிறது. மேலும், பாம்புக்கடி உயிரிழப்பில் 2 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனர் அலுவலகத்தின் கணக்கெடுப்பின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 2019 முதல் 2022 வரையில் 1,284 பேர் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். 2019 ம் ஆண்டில் 24 ஆயிரத்து 573 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களில் 297 பேர் இறந்துள்ளனர்.
கரோனா காலத்தில் மக்கள் அதிகம் வெளியில் செல்லாமல் இருந்த நிலையிலும், 20,399 பேருக்கு பாம்பு கடித்த நிலையில் 252 பேர் இறந்துள்ளனர். 2021 ம் ஆண்டில் 26,287 பேருக்கு பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி 329 பேர் இறந்துள்ளனர். 2022ம் ஆண்டில் 27 ஆயிரத்து 868 பேருக்கு பாம்பு கடித்ததில், 406 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் பாம்பு கடித்து 406 பேர் இறந்துள்ளனர். அதில் அதிகளவில் சிகிச்சை பலனின்றி கோயம்புத்தூர், சேலம், மதுரை, தஞ்சாவூர், விழுப்பும், தேனி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இறந்துள்ளனர். வனப்பகுதிகளை அழித்துள்ள மாவட்டங்களில் தான், அதிக அளவு பாம்புக்கடி சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
அதில் சேலம் 1505, கோயம்புத்தூர் 1499, கடலூர் 1361, மதுரை 1358, தருமபுரி 1294, தஞ்சாவூர் 1213, விழுப்புரம் 1120, செங்கல்பட்டு 1298, திண்டுக்கல் 952, அரியலூர் 971, வேலூர் 968, திருவண்ணாமலை 939, திருவள்ளுர் 873, கள்ளக்குறிச்சி 866, திருச்சிராப்பள்ளி 850, கிருஷ்ணகிரி 808, புதுக்கோட்டை 784, திருவாரூர் 769, விருதுநகர் 769, சென்னை 752, கரூர் 697, நாகப்பட்டிணம் 682, சிவகங்கை 653, திருநெல்வேலி 575, தேனி 561, நாமக்கல் 559, தூத்துக்குடி 542, கன்னியாகுமரி 506, ராமநாதபுரம் 444,பெரம்பலூர் 424, திருப்பத்தூர் 398, திருப்பூர் 344, ராணிப்பேட்டை 257, காஞ்சிபுரம் 100, ஈராேடு 72, தென்காசி 58, கும்பகோணம் 28, நீலகிரி 19 என 27 ஆயிரத்து 868 பேரை பாம்பு கடித்துள்ளது.
இந்நிலையில், பாம்புக்கடி உயிரிழப்பை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், விஷ எதிர்ப்பு மருந்து இருப்பதை பொது சுகாதாரத்துறையின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாம்புக்கடி உயிரிழப்பை தடுப்பதற்காக 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷ எதிர்ப்பு மருந்து இருப்பதை கண்காணித்து வருகிறோம். மருத்துவர், செவிலியர்களுக்கும் பாம்புக் கடிக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1989-இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? - திருநாவுக்கரசர் எம்பி