சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், அந்த புகார் அனைத்தும் பொய்யானது என்றும் அபாண்டமாக பொய் புகார் அளித்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறையை மற்றும் வழக்கறிஞர்கள் பாசறை சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் கூறுகையில், "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அரசியலில் அவரது வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நடிகை விஜயலட்சுமி மற்றும் சிறிய கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்ற பெண்மணி ஆகியோர் கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
பொய்யாகவும் அவதூறாகவும் அரசியல் உள்நோக்குத்துடன் பிற கட்சிகளின் தூண்டுதலின் பெயரிலும் அபாண்டமாக எவ்வித எழுத்துப்பூர்வ ஆதாரமும் இன்றி ஒரு பொய்யான குற்றச்சாட்டினை சுமார் 13 வருடங்களுக்கு பின்னர் பணம் பறிக்க வேண்டும் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் அரசியல் காழ்புணர்ச்சியுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு களங்கம் ஏற்படும் வகையில் மிரட்டி பணம் பறிக்கும் தீய நோக்கத்தோடு முறையற்ற ஆதாயம் அடைவதற்காகவும், குற்ற செயல்களில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் இவர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளோம்.
இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு..பின்னணி என்ன..?
நடிகை விஜயலட்சுமி வைத்திருப்பதாக கூறும் ஆதாரங்கள் அனைத்தும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. அதனை வைத்து மிரட்டுகிறார். மேலும் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2013ல் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலும் பொய்யானது என்று நீதிமன்றத்தில் நிருபிப்போம்.
விஜயலட்சுமிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. இதுவரை சீமான் விஜயலட்சுமிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு கோடி ரூபாயை இது போன்ற பொய் கூறி சீமான் அவர்களிடமிருந்து பெறுவதற்கு இந்த திட்டத்தை விஜயலட்சுமி செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல போராட்டங்களில் சிறைக்கு சென்று வந்துள்ளார். தமிழர்களுக்காக பல போராட்டங்களை செய்து சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்காக அவரை சிறைக்கு அனுப்ப பிற கட்சிகளுடன் இணைந்து திட்டமிட்டால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் அவரை தனியாக சிறைக்கு நாங்கள் அனுப்ப மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பெண் கொலை.. 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது..