சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, கரூரில் உள்ள அவரது சொந்த வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பில் நடைபெற்று வந்தது. மேலும், அவரது சகோதரரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல், தலைமைச் செயலத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைக்கு வெளியே சென்னை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றனர்.
அவர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது எனக்கு தெரியாது. அமைச்சரை அமலாக்கத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்கு சுய நினைவு இல்லை. நேற்று (ஜூன் 13) காலை 7 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவருடன் யாரையும் சந்திப்பதற்கு அமலாக்கத் துறையினர் அனுமதிக்கவில்லை. திடீரென, காலை 2 மணியளவில், செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் இருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய உடல் நலம் எவ்வாறு உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது.
ஆனால், இது முற்றிலும் சட்ட விரோதமானது மற்றும் சட்டத்திற்கு முரணான கைது நடவடிக்கையாக பார்க்கிறேன். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. உண்மையில், அவரது கைது குறித்து அவரின் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
மேலும், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எந்த முகமை விசாரித்தாலும், 41ஆம் மூலதன அறிவிப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மீண்டும் கூறி உள்ளது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று காலை 7 மணி முதல் வெளியே செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல், திடீரென அவரை அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இதில் அமலாக்கத் துறை சட்ட விரோதமான செயலை செய்துள்ளது.
இதையும் படிங்க: ED Raid: தலைமைச் செயலகத்தில் புகுந்த அமலாக்கத்துறை: தேசிய தலைவர்கள் கண்டனம்!