சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது சென்னையிலுள்ள பல காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த பிப்ரவரியில், காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறை கைது செய்தது. பின்னர், கடந்த மாதம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி தலைமறைவானார்.
இந்தநிலையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் தனிப்படை குழு நேற்றிரவு (ஜூன். 12), விழுப்புரம் அருகே கைது செய்தனர்.
இதையடுத்து, இன்று (ஜூன்.13) காலை காக்கா தோப்பு பாலாஜி, கை, கால்களில் காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக, தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். என்ன வழக்கின் கீழ் ரவுடி பாலாஜி, கைது செய்யப்பட்டார் என்பதற்கான காரணத்தை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.
அண்மையில் தென்சென்னை ரவுடி சிடி மணியை கைது செய்த காவல்துறையினர், தற்போது வட சென்னை ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆவின் பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு!