சென்னை: சென்னை அடையாறில் ஸ்மார்ட் விஷன் அண்ட் டயாபட்டிக் கிளினிக் (smart vision and diabetic clinic) என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 16ஆம் தேதிவரை, கோபிநாத் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்காக ரூ. 8 லட்சத்து 5 ஆயிரத்து 787 பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகையானது, அரசு அறிவித்ததைவிட, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 807 ரூபாய் அதிகமாகும்.
மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி
அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத்தை 7 நாள்களுக்குள் மீண்டும், சிகிச்சை பெற்ற நபரிடம் மீண்டும் திரும்பி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார இயக்குனருக்கு, மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திரும்பி வழங்கப்பட்ட சிகிச்சைக் கட்டணம்
அனைத்து மருத்துவமனைகளும் மாநில அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றவும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிகமாக சிகிச்சை கட்டணம் வசூலித்த 10 மருத்துவமனைகளிலிருந்து, ரூ.18 லட்சத்து 36 ஆயிரத்து 689 பணம் மீண்டும் சிகிச்சை பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '12 மாதம் பேறுகால விடுப்பு வழங்க முடியாது' - தமிழ்நாடு அரசு