சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை, காவேரி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(20), அதே பகுதியில் பழைய பொருட்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 2 நபர்கள் பழைய நாணயங்கள், பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்ய வந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த பாலமுருகனின் தாயாரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். மைசூரில் தங்களது கிராமத்தில் பூச்செடிகளுக்கு களிமண் எடுக்கச்சென்ற போது, தங்க புதையல் கிடைத்ததாகவும், அதில் ஒரு குண்டுமணியை காட்டி, அதனை எடை போட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அவரும் நம்பி எடை போட்டு 700 மில்லி கிராம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் தங்களிடம் இதே போன்று எட்டு கிலோ உள்ளதாகவும் நீங்கள் அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி போன் நம்பர் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அதன்பின் 2 நாட்களாக போன் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க புதையலை 40 லட்சம் ரூபாய்க்கு தருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.
இதனை பற்றி பாலமுருகனிடம் தாயார் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அவர்களை தொடர்புகொண்டு திருவெற்றியூர் வரசொல்லியுள்ளார். ஆனால், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும், அங்கு வந்து பெற்றுகொள்ளும் அந்த நபர்கள் கூறியுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில் மேற்படி 2 நபர்களையும் வில்லிவாக்கம், பேருந்து நிலையம் அருகில் வரவழைத்து அவர்கள் கொண்டு வந்த முத்து மாலையை பார்த்த போது, அது தங்கமுலாம் பூசப்பட்ட போலியான தங்க நகை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாலமுருகன் தனது உறவினர்களை வரவழைத்து அவர்களை பிடித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் என்பதும், தற்போது சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தங்கி வசிக்கும் வீரு (38), அர்ஜுன்( 25,) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ எடையுள்ள தங்க மூலாம் பூசப்பட்ட போலியான முத்து மாலை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இருவரும் உறவினர்கள். கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜ சாகர் அணையின் கீழ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள். மகாராஷ்டிரா அம்பிவெளி, கர்நாடக மாநிலம் ஃபிதர், ராஜஸ்தான் பவரியா கொள்ளையர்கள் போல இவர்கள் ஊரில் உள்ளவர்கள் அனைவருக்குமே திருட்டு, மோசடி செய்வது தான் பிரதான தொழிலாகும்.
வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்கு கூலித் தொழிலாளிகள் போல தங்கி நோட்டமிட்டு திருடுவது, போலி நகைகளை கொடுத்து ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தங்கி கூலி வேலை பார்ப்பது, ப்ளவர் வாஷ் விற்பனை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வபோது லம்பாக பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று சில மாதங்கள் தங்கி விட்டு மீண்டும் வந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: க.அன்பழகன் சிலையில் மாற்றம் செய்யக்கோரிய முதல்வர்.. காரணம் என்ன?