திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் பவர் கிரிட் நிறுவனத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த 1000 நபர்கள் தங்கி, கான்ட்ராக்ட் முறையில் பல்வேறு பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கினால், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்களது சொந்த ஊர்களுக்கு, ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்து தரக்கோரி,நொச்சிபாளையம் பிரிவில் இருந்து 4 கிலோமீட்டர் நடந்து வந்து, ஊதியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து காங்கேயம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா, ரவிக்குமார், வட்டாட்சியர் சிவசுப்பிரமணி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஊருக்குச் செல்வதற்கு ரயில் சேவை ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதுபோல, சென்னை - தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாலு குமார் (19), தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக நண்பர்களுடன், சேலையூர் காவல் நிலையத்தில் முன்பதிவு படிவத்தை வழங்கிவிட்டு திரும்பினார்.
அப்போது வேளச்சேரி நோக்கி வேகமாக சென்ற கார் மோதியதில், லாலு குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறை உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கார்ஓட்டுநர் மதன்மோகன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சக நண்பர் தங்கள் கண் முன்னே பலியானதால், உடனிருந்த சக நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார்