சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று (நவ.28) மழையின் தீவிரம் சற்று குறைந்தது. வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 80 விழுக்காடு கூடுதலாக பெய்து உள்ளது.
2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,057 மி.மீ மழையும், சென்னையில் 1,610 மி.மீ மழையும் பெய்தது. ஆனால் 2021ஆம் ஆண்டு சென்னையில் 1,866 மி.மீ மழையும், தமிழ்நாட்டில் 1,300 மி.மீ மழையும் ஜனவரி முதல் தற்போது வரை பெய்து உள்ளது.
தென்மேற்கு மழையின் போதே தமிழ்நாட்டில் ஏரி, கண்மாய், குளங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. கூடுதல் மழை பெய்ததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 7 ஆயிரத்து 593 ஏரிகள் முழு கொள்ளளவான 100 விழுக்காட்டை எட்டி உள்ளன. 3 ஆயிரத்து 104 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவை எட்டி உள்ளன.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அடையாறு கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும்.
நேற்று மழைக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 இடங்களில் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். டெங்குகாய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறையினர் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மானாமதுரையில் பாலம் அமைக்கத் தடை கோரிய மனு: உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு