சென்னை: பூந்தமல்லியைச் சேர்ந்தவர் ராஜா இவர் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் கன ரக வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று இரவு இவரது கடைக்கு வந்த சிலர் தகராறு செய்துள்ளனர்.
கடையிலிருந்த வட மாநில தொழிலாளர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வட மாநில தொழிலாளர்கள் ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பூந்தமல்லி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னீர்குப்பத்தில் உள்ள டாஸ்மாக்கில் ஜெகன் தரப்பினருக்கும், ராஜா தரப்பினருக்கும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்று இரவு ராஜா நடத்தி வரும் கடைக்கு வந்து ஜெகன் தரப்பினர் தகராறு செய்ததால் வாக்குவாதம் முற்றிய நிலையில் வட மாநில தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கடையில் வந்து தகராறு செய்தவர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "எங்களது போட்டித் தேர்வு மதிப்பெண்களை வெளியிடுக" - திருநர் கூட்டமைப்பு!