கடந்த 14ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, மூன்றாயிரத்து 770 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட ஒன்பது கிலோ மீட்டர் நீளமுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்த மெட்ரோ சேவையை வரவேற்ற வடசென்னை மக்கள், மெட்ரோ ரயிலில் பயண கட்டணம் உயர்வாக உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வடசென்னை சமூகநல அமைப்புகள் முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்த மனுவில், "சென்னையின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும்வகையில் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வட சென்னையில் வசிக்கும் பின்தங்கிய மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் என்று பெரும்பகுதியினர், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் அவர்களின் ஆர்வத்திற்கும் விருப்பத்திற்கும் மெட்ரோ ரயில் பயண கட்டணம் பெரும் தடையாக இருப்பதைத் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்வை கடக்கிறவர்கள், அவர்களின் மாதச் சம்பளம் என்பது குறைந்தபட்சம் ஐந்தாயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரைதான் உள்ளது.
மேலும் ஒரு நாளுக்கு 400 ரூபாய் கூலி பெறுபவர்களால் தினந்தோறும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. ஏழை மக்களைப் பொறுத்தவரை மெட்ரோ ரயிலில் பயணம்செய்வது கனவாகத்தான் இருக்கிறது.
சென்னைவாழ் மக்கள் எளிதில் செலுத்தும்வகையில் மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை தற்போதைய கட்டணத்தைவிட பாதியாக குறைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'அமைச்சர் என் பெயரைப் போட வேணாம்னு சொன்னாரா' - கொந்தளித்த ராதாரவி!