சென்னை: ஆர்கே நகரில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காவல் துறையினர் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்தனர். ஆனால், அந்த நபர் காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஓட தொடங்கியுள்ளார். அவரை விடாமல் காவலர்கள் துரத்தி சென்றனர்.
அந்நபர் தப்பி ஓடும்போது ரயில்வே தண்டவாள பகுதியில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது. தொடர்ந்து, அவரை பிடித்த காவல் துறையினர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சைக்குப் பிறகு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் புதுவண்ணாரபேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசிக்கும் விச்சு என்கிற சைலேஷ்குமார் என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வழிப்பறி என 22 வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.