சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஏற்கனவே பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் உள்ள 4 வளாகங்களை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி ஊதிய அடிப்படையில் கிட்டத்தட்ட 400 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளனர். அவர்கள், இந்தப் பல்கலைக்கழகத்தில் சில வருடங்கள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிகின்றனர். “கலைஞர் அய்யா திட்டம்” என்ற பெயரில் 10 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றி வரும் இவர்களது சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிவது போல் ஏஜென்சி மூலம் பணியாளர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அனைவரையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றிக் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றினால் அவர்களது குடும்பங்கள் வீதிக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவால் கிட்டத்தட்ட 400 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சேவைகளை முறைப்படுத்தவும், அவர்களின் சேவைகள் தொடரவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடுமாறு முதலமைச்சரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாகச் சேவையாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து, அவர்களின் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்க முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றி அமைப்பு!