சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை ஜிம்கானா கிளப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், இவரைப்போல ஒரு ஆட்சியாளர் இந்தியாவிலேயே இல்லை என்பது போல அவரது ஆட்சி காலம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் இருந்தது.
மக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உறுதியாக இருந்தவர், குறிப்பாக விவசாயம், 13 தடுப்பு அணைகள் கட்டி தமிழகத்தை விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜருக்கு பெரும் பங்கு உண்டு. எல்லா துறைகளிலும் சாதனை செய்த காமராஜர் ஒரு 360 டிகிரி முதலமைச்சர். தமிழகத்தில் மட்டுமல்லாது காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்.
திமுக செய்யக்கூடிய அரசியலில் இதை ஒரு புது அரசியலாகத்தான் பார்க்கிறேன். திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதுதான் அவர்களுடைய முதல் தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை என்று அவர்கள் சொன்னதற்கு பிறகும் முதலமைச்சர் ஏன் கர்நாடகா செல்ல வேண்டும். மேகதாது அணை கட்டவே முடியாது என்கிற நிலையில் காங்கிரஸ் ஆட்சி அதை கட்டியே தீர வேண்டும் என்று முயற்சி செய்கிறது. அதைப்பற்றிய தீர்மானங்கள் அதில் இல்லை. இவர்களது தீர்மானம் வெறும் பொய்யும் புரட்டுமாகத் தான் உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதற்கு தான் இந்த தீர்மானங்களை போட்டிருக்கிறதா?
ஒரு பக்கத்தில் தமிழர்களின் உரிமை களவு போய்க் கொண்டிருக்கிறது. அதைப்பற்றி ஒரு பேச்சும் இல்லை. இவர்கள் கூறுகின்ற எல்லா பொய்களுக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அமைச்சர்கள் அனைவரின் மூலமாகவும் பதில் கிடைக்கும். பொது சிவில் சட்டத்தைப் பற்றி குறைகள் கூறியிருக்கிறார்கள். ஜிஎஸ்டி வந்த பிறகு இந்தியாவில் எல்லா மாநிலங்களும் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி இல்லை. இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் தான் 20%, 30% கமிஷன் கேட்டால் எப்படி இங்கு தொழில்துறைகள் உள்ளே நுழையும். அதனால் இவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை கூறக்கூடாது.
15 இலட்சம் ரூபாய் பிரதமர் சொன்னதாக கூறுகின்ற செய்திகளை உண்மை என்று ஆதாரத்தோடு நிரூபித்தால் ஒரு கோடி என்ன ஆயிரம் கோடி கிடைக்கும். கருப்பு பணத்தை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழக முதலமைச்சருக்கும் தகுதி இல்லை.
திமுகவினருக்கு ஆங்கிலமே தெரியாது. தமிழும் அரைகுறை. ஹிந்தியும் 0 அதனால் தான் ஒன்றுமே தெரியவில்லை. படத்தில் நடிப்பதை போன்று பத்திரிக்கையாளர் கேட்க கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டு பதில் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கொஞ்சமாவது அவர்களை கேபினட்டில் இருப்பவர்களை ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் என்ன பேசினார் என்று இவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனால் தான் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என கூறினார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்!