சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு அகில இந்திய அளவிலான நீட் தேர்வு கூடாது எனவும், மாநில அளவிலேயே சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்களுடன் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட், ஜேஇஇ தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் , பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவித்தோம்.
அதேபோல், அனைத்து மாநிலங்களில் உள்ள கல்வித்துறை அமைச்சர்களும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வினை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசின் கருத்துகளை செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கான தேர்வினை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசித்தனர். இது குறித்து முதலமைச்சரிடம் கலந்துபேசி தமிழ்நாட்டின் கருத்துகளைத் தெரிவிப்போம். கரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வினை நடத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும். எனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில் நுட்பப் படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து ஒன்றிய அரசு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும். ஜேஇஇ, ஐசிஏஆர் ஆகிய தேர்வினை எழுதி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பம், விவசாயப் படிப்புகளில் சேர்வதற்கு அவர்கள் தேர்வினை நடத்துகின்றனர். அதேபோல் தேசிய தேர்வு முகமை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வினை நடத்துகிறது.
மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் மத்திய அரசு, நீட் தேர்வினை நடத்திக்கொள்ளுங்கள். மாநில கல்லூரிகளுக்கு நீட் வேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம். மேலும் மாநிலக் கல்லூரிகளுக்கு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்கிற கருத்தை வலியுறுத்தி உள்ளோம். மேலும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கருத்தாகும். இது குறித்து ஏற்கனவே 2 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வை மாநில அரசே நடத்த அனுமதி வேண்டும்’ - டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!