தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு போன்ற செலவினங்களை மேற்கொள்வதற்கு மாநிலத் திட்ட இயக்குனரால் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுடலைக் கண்ணன் இந்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்புத் தொகையை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்கான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் உள்ள 46 தொடக்கப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றி அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. எனவே 46 தொடக்கப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது.
ஒன்று முதல் 15 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.12 ஆயிரத்து 500, 16 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், 101 முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம், 251 முதல் ஆயிரம் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 75 ஆயிரம், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சம் என மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் 10 சதவிகிதம் தொகையை பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, கழிப்பறையை சுத்தமாக பராமரித்தல், கை கழுவுமிட வசதி, தூய்மையான குடிநீர் போன்றவை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றுதல், மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்: இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்