சென்னை: அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான பி. புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், மதுரை மத்திய சிறையில் சிறைக் கைதிகளால் மருத்துவப் பொருள்கள், ஸ்டேஷனரி பொருள்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2016 முதல் 2021 மார்ச் மாதம்வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், சிறைக் கைதிகளுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்ததுபோல் கணக்கு காண்பித்துள்ளதாகவும், இதில் அப்போதைய சிறைத் துறை கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக உள் துறைச் செயலர், சிறைத் துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முன்னிலையாகி, ஊழல் தொடர்பாக தணிக்கை அறிக்கை உள்ளதாகவும், தகவல் அறியும் சட்டத்தின்கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகாரில் என்ன அடிப்படை உள்ளது. உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை எனத் தெரிவித்தனர். இந்த மனுவைத் திரும்பப் பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்செய்ய அனுமதி அளித்தனர்.