தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, பள்ளிகளுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏப்ரல் 10ஆம் தேதியே விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வி இயக்குநரகம், பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், அன்றைய தினமே மாணவ-மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார்.
இந்த சூழலில், வெயிலால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சொன்னபடி, சொன்ன நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.