கரோனா ஊரங்கு காரணமாக கோயம்பேடு சந்தையிலிருந்த கடைகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பூச்சந்தை வானகரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக செட் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. ஆனால் காய்கறி, பழம், தானிய கிடங்குகள் வழக்கம்போல் மீண்டும் கோயம்பேடு சந்தையில் திறக்கப்பட்டது, பூச்சந்தை மட்டும் இன்னும் மாற்றப்படவில்லை.
இந்த நிலையில் நிவர் புயல் தாக்கம் காரணமாக பூச்சந்தை மேலே அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் அனைத்தும் காற்றில் தூக்கி வீசப்பட்டு பறந்தன. மேலும் மழைநீர் செல்ல வழியில்லாததால் பூச்சந்தை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் சென்று பூவை வாங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சந்தை முழுவதும் சேரும், சகதியுமாக காட்சி அளிப்பதால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மின்சார பெட்டியும் நீரில் மூழ்கி உள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. மின்சாரம் இணைக்கப்பட்டால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோயம்பேடு சந்தையில் மீண்டும் பூச்சந்தையைத் திறக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.