சென்னை: அம்பத்தூர் அருகேயுள்ள அன்னை இந்திரா நகர் கோரை தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (25). இவர் அம்பத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர். இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஏழு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
உதயகுமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் அருகேயுள்ள வேப்பம்பட்டு பாரதியார் நகரில் தனது குடும்பத்துடன் தங்கி வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 27) மதியம் உதயகுமார் தனது தாய் லதாவை பார்க்க சண்முகபுரம் சென்றார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த கடத்திச் சென்றனர்.
இதனை அவரது நண்பர் அஜித் என்பவர் உதயகுமாரின் தாய் லதாவிடம் தெரிவித்தார். இதனையடுத்து லதா இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கடத்தப்பட்ட இடத்திலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து கடத்தல்காரர்களை தேட ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, அப்பகுதியிலுள்ள தாமரைக்குளம் அருகே உதயகுமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உதயகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உதயகுமாரின் நண்பர் ஜீவா (26) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ், லாரன்ஸ், எலியா சாமுவேல் ஆகியோர் கடந்த மாதம் 18ஆம் தேதி தாக்கியதாக தெரிகிறது. இதனையறிந்த உதயகுமார், மோசஸ் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் ராஜலட்சுமியிடம் தட்டிக் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை கடத்திச் சென்று முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அப்புன் என்ற பூவராகவன் (35), சரண் (19), ராமமூர்த்தி (22), மாரிஸ் (20), பிராங்கிளின்(23), முகுந்தன் (20), எலியா சாமுவேல் (20) மாணிக்கம் (24), வினோத்குமார் (40) ஆகிய ஒன்பது பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மோசஸ், எலியாஸ், லாரன்ஸ் ஆகிய மூவரயும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தக்காளியை தள்ளிக்கொண்ட போன திருடன் கைது - இதுக்கு முன்னாடி ஆப்பிள்