சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்த முயன்ற வழக்கில், நாட்டின் பாதுகாப்பு கருதி என்ஐஏ தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் இதுவரை இரு முறை சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தொடர்புடைய பல்வேறு டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதுடன், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சென்னையை அடுத்த கேளம்பாக்கம் தையூர் பகுதியில், என்ஐஏ அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும் தாதாவுமான குணசேகரன் (எ) குணா பிடிபட்டார். மேலும் பாகிஸ்தான் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல் தலைவனும், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்காக ஆயுதங்கள் சப்ளை செய்து வருபவருமான ஹாஜி சலீமுக்கு நெருக்கமான நபராக கருதப்படும் புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா என்பவரையும் என்ஐஏ அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும், என்ஐஏ அலுவலர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் இயந்திரங்கள் மற்றும் குற்றம் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆண்டிலியா வழக்கில் குற்றப்பத்திரிக்கை வழங்க அதிகம் செலவாகும் - என்ஐஏ விளக்கம்!