மே 28ஆம் தேதி சென்னையை சேர்ந்த லண்டன் மாணவி காணாமல் போனதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் அந்த மாணவியின் தந்தை புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது மகள் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டார் என கூறப்பட்டிருந்தார்.
இதுபற்றி விசாரணை மேற்கொண்டதில் மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் தீவிரவாத கும்பல் செயல்பாடுகள் உள்ளதால், டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடமிருந்து வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கு ஜூலை 11ஆம் தேதி மாற்றப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நபீஸ் என்ற பங்களாதேஷை சேர்ந்த நபர் சென்னை மாணவியை லண்டனில் கடத்தியதும், அந்த மாணவியை மதமாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதில் நஃபீஸ் உடன் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்க்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் நஃபீஸ் வங்கதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியின் மகன் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், எந்த வகையில் தொடர்பு இருப்பது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் எந்த அடிப்படையில் இந்தக் கடத்தலுக்கு துணை போய் இருக்கிறார் என்பதையும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. கடத்தலில் தொடர்புடைய நஃபீஸ் இந்தியா அழைத்து வந்து விசாரணை செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவை கலங்கவைத்த சைபர் கொள்ளையர்கள்: ஏடிஎம்மில் நூதன திருட்டு!