சென்னை: வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வட மாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவிற்குள் ஊடுருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதேபோல் சென்னையிலும் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததன.
அதன் அடிப்படையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்திலும் மற்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் அழைத்து வரப்படுகிறார்களா? அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடன் அழைத்து வரப்படுகிறார்களா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை அருகே போலி ஆதார் அட்டை வைத்து இருந்த நியான், சப்ஜீன் உசேன், முன்னா ஆகிய மூன்று பேரை பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் படைப்பை பகுதியில் சப்ஜீன் உசேன் என்பவரும், செங்கல்பட்டு வட்டம் மறைமலைநகர் கோவிந்தபுரம் பகுதியில் நியான், முன்னா ஆகியோர் திரிபுரா மாநிலத்தின் முகவரியில் போலி ஆதார் அட்டைகளை வைத்து ஜூஸ் கடையில் பணியில் சேர்ந்து அங்கேயே தங்கி வந்துள்ளனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் இவர்கள் மூவரும் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்டது தெரியவந்ததின் அடிப்படையில் இவர்கள் மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் இவர்கள் வேலைக்காக சட்ட விரோதமாக இந்தியாவிற்க்குள் நுழைந்தார்களா அல்லது வேறு நோக்கத்துடன் வந்தார்கள என தெரியவரும்.
மேலும், இவர்கள் உண்மையான பெயர்கள் என்ன, வங்கதேசத்தில் எந்த பகுதிகளை சேந்தவர்கள், இவர்களுக்கு இந்திய போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து கொடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.