சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் முதல்முறையாக இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள நெக்ஸ்ட் தேர்வினை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாகவே நெக்ஸ்ட் தேர்வினை அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு தொடர்ச்சியாக கூறி வந்தது. இதற்கு தமிழக அரசு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும் கூட, இந்த தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
National Exit Exam என்று அழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு கடந்த 2019ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்முறையாக அமலுக்கு வருகிறது. இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகின்றன. அதன்படி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதல் கட்டத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் ஆறு பாடங்கள் இடம் பெறுகின்றன.
இவை அனைத்திலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஓராண்டு பயிற்சி மருத்துவர் என்ற நிலைக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஓராண்டு பயிற்சி மருத்துவர் நிலையை முடித்த பிறகு, இரண்டாம் கட்ட நெக்ஸ்ட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்கள் முதுகலை பட்டப் மருத்துவப் படிப்பிற்கு செல்ல தகுதி பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் கட்ட நெக்ஸ்ட் தேர்வில் ஒரு சில பாடங்களில் தோல்வி என்றாலும் கூட மீண்டும் அந்தப் பாட தேர்வு எழுதி முடிக்க வேண்டும். ஆண்டிற்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மே, நவம்பர் மாதங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு வரக்கூடிய நவம்பரில் முதல்முறையாக நெக்ஸ்ட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்தும் முகமை எது என்பதை தேசிய மருத்துவ ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும், மருத்துவப் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரும் வகையில் உள்ள நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் பல்வேறு அமைப்புகளும் நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி கூறும்போது; '' கடந்த 2019ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்முறையாக அமலுக்கு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்தாலும் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதலின்படி மட்டுமே செயல்பட முடியும். இதனால் மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு பறிக்கப் பார்க்கிறது. மாணவர்கள் இளநிலைப் படிப்பில் 4 ஆண்டுகள் படித்த பாடத்தை மீண்டும் படித்து தேர்வு எழுதினால் மட்டுமே தகுதிபெற முடியும்.
இதனால் மாணவர்கள் மருத்துவப் படிப்பினை செயல்முறையாக கற்றுக் கொள்வதற்குப் பதில் தேர்விற்காக படிப்பதிலேயே கவனம் செலுத்துவார். இந்தியாவில் பிற மாநில முதலமைச்சர்கள் நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறாேம்.
இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவது மிகவும் கடினமாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டிற்கு முன்னர் படித்த மாணவர்கள் முதுகலைப்பட்டப் படிப்பில் சேர்வதற்கு நெக்ஸ்ட் தேர்வினை எழுதத் தேவையில்லை எனவும், அவர்களுக்காக கால அவகாசம் வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது'' எனக் கூறினார்.
இதையும் படிங்க:மணிப்பூர் கலவரம் குறித்த பேச மறுப்பு... நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!