மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், இதுகுறித்து ஆலோசிக்க காணொலி காட்சி வாயிலாக இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ தலைவர் நேரலையில் பேசவுள்ளார்
கரோனா சூழல் காரணமாக இஸ்ரோவின் அடுத்தகட்ட பணிகளுக்கான நிதி தற்காலிமாக நிறுத்திவைக்கப்படும் என செய்திகள் வெளியாகிவரும் வேளையில், இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை 11.30 மணிக்கு நேரலையில் பேசவுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கம்
தூத்துக்குடியில் மொபைல் கடை நடத்திவந்த தந்தை, மகன் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தேனியில் முழு ஊரடங்கு
கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆறாவது மாவட்டமாக தேனி இணைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தேனியில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தென்னை சாகுபடி ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - புதுச்சேரி அரசு
ஜூன் 24 முதல் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்திலும், அனைத்து உழவர் உதவியகங்களிலும் தென்னை சாகுபடி ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 31ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.
இமாச்சலில் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
இன்று (ஜூன் 24) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இமாச்சல பிரதேசத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது என மாநில வானிலை ஆராய்ச்சித் துறை எச்சரித்துள்ளது. ஆரஞ்ச் வார்னிங் கொடுத்து துறை சார்ந்த அலுவலர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முடுக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - ஜெயராஜ் மனைவி புகார்