கூவம் ஆற்றில் தவறி விழுந்த இருவர் உயிரிழப்பு:
சென்னை: செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் நேற்று (செப்.06) சிந்தாதிரிப்பேட்டை நடைபாதை மேம்பாலத்தின் மீது உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கூவம் ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து அங்கு இருந்த தேவராஜ் என்பவர் கூவம் ஆற்றில் விழுந்த பழனியை மீட்க முயற்சித்துள்ளார். அப்பொழுது அவரும் கூவத்தில் விழுந்து மூழ்கியுள்ளார். இதையடுத்து இருவரும் கூவம் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து எழும்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த நிலையில் இருந்த பழனியின் உடலை மட்டும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீரில் ழுழ்கிய தேவராஜன் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டட தொழிலாளியை கத்தியால் குத்தி விட்டு செல்போன்கள் திருட்டு:
சென்னை: மயிலாப்பூர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு (செப்.06) வடமாநில தொழிலாளர்கள் கட்டடப் பணியை முடித்துவிட்டு கட்டிடத்தின் இரண்டாவது தலைப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வட மாநில தொழிலாளர்களின் ஐந்து செல்போன்களை திருடி கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த பிந்து குமார் என்கிற தொழிலாளர் கூச்சலிட்டுள்ளார். அப்பொழுது அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு ஐந்து செல்போன்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் காயமடைந்த தொழிலாளியை அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீஸ்:
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் பதிரியடித்துக் கொண்டு முருகன் கூச்சல் இட்டுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பட்டினப்பாக்கம் தலைமை காவலர் ஜெய் பிரகாஷ், செல்போன் பறித்துச் சென்று தப்பி ஓடிய திருடனை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த காவலர் உரியவரிடம் ஒப்படைத்தார். திருடனை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திமுக பிரமுகர்கள் மோசடி செய்ததாக திரைப்படத் துணை நடிகர் புகார்:
சென்னை: கேகே நகரைச் சேர்ந்தவர் ஆத்மா பேட்ரிக். இவர் பிகில், தெறி, டாக்டர் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது நண்பர் சுரேஷ் ராமநாதன் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறியதன் பேரில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் 53 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து அந்த தொகையை சுரேஷ் ராமநாதன் ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் காவல் துறையினர் அந்த தொகையை மீட்டு தராததால் கடந்த மார்ச் மாதம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திமுக பிரமுகர்கள் கமல் தாஸ், ஆனந்த் ஆகியோரை அனுகியுள்ளார்.
இதையடுத்து இருவரும் பணத்தை மீட்டு தருவதாக தருவதற்கு 7 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டுள்ளார். இதற்கு முன்பணமாக ரூபாய் 2 லட்சம் தனது காரையும் அவர்களிடம் ஆத்மா பேட்ரிக் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னை பணத்தை மீட்டு தருவதாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதனால் விரக்கி அடைந்த ஆத்மா பேட்ரிக் சென்னை கேகே நகர் காவல் நிலையத்தில் தனது பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வதாக திமுக பிரமுகர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு!