சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க 92 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கருவிகளை சென்னை காவல்துறை வாங்கி உள்ளது.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குபவர்களை பிடிக்க பயன்படுத்தப்படும் பிரீத் ஆனலைசர் கருவி, போக்குவரத்து வீதிமீறல்களில் ஈடுபடுவோரை உடனடியாக படமெடுக்கும் அதிநவீன முறையில் சிம்கார்டு மற்றும் துல்லியமான கேமரா பொருத்தப்பட்டு உள்ள கருவிகளை காவல்துறை வாங்கி உள்ளது. இந்த கேமிரா போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை படமெடுத்து உடனடியாக சர்வருக்கு அனுப்பும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முறைகேடு நடைபெறாத வகையில் 50 பிரீத் ஆனலைசர் கருவிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மலக்குழி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - தூய்மை பணியாளர்கள் நல ஆணையர் பேட்டி!
அதேபோல் போக்குவரத்து மற்றும் விஐபி நடமாட்டத்தை நேரலையாக போக்குவரத்தை கண்காணிக்க ரைபாட் கேமராக்கள் வாங்கப்பட்டு உள்ளன. மேலும் தென் இந்தியாவில் முதல் முறையாக ரோந்து வாகனங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் 2d ரேடார் பொருத்தப்பட்டு, சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு செலான் போடும் மாடர்ன் இண்டர்செப்டார் வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது.
இதே போல நேப்பியர் பாலம் அருகே 2.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை போக்குவரத்து பூங்கா புதுப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 புதிய போக்குவரத்து கருவிகள் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தினை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து பூங்காவில் துவங்கி வைத்து, கருவிகளை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக மாநகராட்சியுடன் இணைந்து வாரந்தோறும் 600 பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், போக்குவரத்து துறை சார்பில் நடைபெறும் கண்காட்சியில் போக்குவரத்து காவல்துறை கலந்து கொண்டு அதில் பயன்படுத்தப்படும் புதிய தொழிற்நுட்பங்களை வாங்கி சோதனை ஓட்டம் நடத்தி சென்னையில் அமல்படுத்தி வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக 2,3 கோடி ரூபாய் வரை மட்டுமே நிதி பெற்று வந்ததாகவும், ஆனால் இந்த முறை 10 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: குறைகளைக் கூறிய அதிமுக.. கொள்ளை அடிப்பதாக திமுக குற்றச்சாட்டு.. சூடான சென்னை மாமன்றம்