சென்னை: மின் துறை சார்ந்த குறைகளை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் விதமாக, மின்னகம் என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மின்னகம்
இந்த புதிய சேவை மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்புதாரர்களின் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற/இறக்கம், உடைந்த மின்கம்பங்கள் உள்ளிட்ட அனைத்து மின் துறை சார்ந்த புகார்களும் பதிவு செய்யப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைமைஅலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்நுகர்வோர் சேவைமையத்தை 9498794987 என்ற கைப்பேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
24 மணி நேர சேவை வழங்கப்படும்
இங்கு ஒரு சுழற்சிக்கு 65 நபர்கள் வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்களின் புகார்களை கணினி மூலம் பதிவு செய்து, உரிய அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் உடனடியாக தகவல் தெரிவிப்பர்.
உடனடி நடவடிக்கை
இந்த புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், புகார்தாரரின் கைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மின்வாரியம் தொடர்பாக, சமூகவலைதளம் (Facebook, Twitter, Instagram) மூலம் பதிவேற்றப்படும், புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ’Social Media Cell’ அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி