சென்னை: சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக பயணிகள், விமானங்கள் வந்து தரை இறங்குவதற்கு முதலாவது விமான ஓடு பாதையும், சிறிய ரக விமானங்கள் தரை இறங்குவதற்கு இரண்டாவது விமான ஓடுபாதையும் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடு பாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, முதலாவது பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது ஓடு பாதையை விமானங்கள் தரை இறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓடு பாதைகளில் தரையிறங்கும் விமானம், அதில் இருந்து விரைவாக வெளியேறும் வகையில் ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வே அமைக்கும் பணி சென்னை விமான நிலைய ஓடு பாதை பகுதியில் நடந்து வருகிறது.
இதன் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 4 ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவே என்பது, டாக்ஸி வேக்கும் விமான ஓடுபாதைக்கும் இடையில் இருக்கும் பகுதி ஆகும். தற்போது பிரதான ஓடு பாதையில் ஒரு மணி நேரத்தில் 30க்கும் அதிகமான விமானங்கள் கையாளப்படுகின்றன.
அப்போது அடுத்தடுத்த விமானங்கள் உடனடியாக, தரையிறங்க வசதியாக இந்த ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்கள் பயன்படுத்தப்படும். மொத்தம் நான்கு ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்களில் இரண்டின் பணிகள் முழுமை அடைந்துள்ளன. இதன்படி, தற்போது இசட் மற்றும் டி ஆகிய இரண்டு ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்கள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதில் இசட் எக்ஸிட் டாக்ஸி வேயில் தரை இறங்கும் விமானங்கள், டாக்ஸி வேக்குள் செல்வதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. டி டாக்ஸி வே உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய இசட் மற்றும் டி ஆகிய ரேபிட் இசட் டேக்ஸி வேக்களில், முதலாவதாக வந்து தரை இறங்கிய விமானங்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீர் பீய்ச்சி அடித்து, விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு பக்கங்களிலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நின்று கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து, புதிய டாக்ஸி வேக்களில் தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், “இந்த டாக்ஸி வேக்களால் விமான ஓடு பாதைகளில் ஓடும் விமானங்கள் வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாக தரையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும்.
இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதம் இல்லாமல் குறித்த நேரமோ, அல்லது ஓரிரு நிமிடங்கள் முன்னதாகவோ புறப்பட்டுச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 40 விமானங்களுக்கு மேல் இயக்க முடியும்.
சென்னை விமான நிலைய ஓடு பாதைப் பகுதியில் பணிகள் நடந்து கொண்டிருக்கும். மற்ற இரு ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்களின் பணிகள் நிறைவடைந்த பின்பு, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு தரையிறங்குவதில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை புதிய விமான முனையம் முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?