சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் தேங்கிய மழை நீரை மின்மோட்டார் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அமைச்சர் கே என் நேரு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, “நீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்பு மூலமாக நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கல் வாரியதுடன் இணைந்து பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் பணிகள் முடிந்து, சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது போல் மக்கள் துயரம் நிரந்தரமாக நீங்கும்.
மசூதி காலனி, ராஜமன்னார் காலணியில் நீர் தேங்கி இருந்தது ஆனால் தற்போது நீர் தேங்கவில்லை. அதை பார்வையிட இருக்கிறோம். காலையில் அடையாறில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் நீர் வடியும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீர் வடியாத இடத்தில் தான் மோட்டார் பம்புகளை வைத்து அகற்றி வருகிறோம். அப்படி மோட்டார் பம்புகள் வைத்து நீரை வெளியேற்றும் பகுதிகளில் வடிகால் அமைத்து நிரந்தரமாக நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடசென்னை பகுதியில் இரண்டு இடங்களில் மட்டும் அதுவும் அங்கு மழைநீர் வடிகால் இல்லாத காரணத்தினால் நீர் தேங்கியது அதையும் வெளியேற்றி வருகிறோம்.
ஒருமுறை தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. மூன்று முறை நோட்டீஸ் அளிக்க வேண்டும். அது மட்டும் இன்றி ரத்து செய்த பின்பு மீண்டும் டெண்டர் விட வேண்டும். அப்படி விடும் பொழுது நிதி ( rate) பத்து சதவீதம் அதிகரித்து விடும். இதன் காரணமாக ஒப்பந்ததாரரை பணி முடியும் வரைக்கும் அனுசரித்து செல்ல வேண்டும்.
அனுசரித்து செல்ல வேண்டும் என்பது, ஆள் பற்றாக்குறையாக இருந்தால் அல்லது அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து அவர்களையே பணி செய்து முடிக்க வைப்பது தான். மீண்டும் டெண்டர் விடப்பட்டால் மூன்று மாதங்கள் எடுக்கும். இதனால் மூன்று மாதங்கள் பணி நின்று விடும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழைநீரில் மூழ்கிய வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை ... போக்குவரத்து துண்டிப்பு