சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தைப் போல, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அண்ணாநகர் பூங்கா கோபுரம். இந்த கோபுரம் கடந்த 1968-ம் ஆண்டு கட்டப்பட்டது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நகர் பூங்காவில், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம் எனப் பல வசதிகள் உள்ளன.
இங்கு 135 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தின் மீது ஏறி பார்த்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளின் அழகை கண்டு ரசிக்கலாம். அந்த வகையில் அண்ணாநகர் பகுதிவாசிகளுக்கு இந்த கோபுரம் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு 12 அடுக்குகள் கொண்ட இந்த உயர் கோபுரத்தில் இருந்து காதல் ஜோடி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து பாதுகாப்புக் கருதி, பொதுமக்கள் கோபுரத்தின் மீது ஏற தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. அதற்குப் பிறகு கோபுரம் திறக்கப்படவில்லை. எனினும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், கோபுரத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கானப் பணிகளை மாநகராட்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் சென்னை மாநகராட்சியின் முயற்சியினால் பூங்காவின் கோபுரத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் புனரமைக்க சென்னை மாநகராட்சி ரூ.89 லட்சத்தை ஒதுக்கியது. கோபுரத்திற்கு மேலே செல்லும் சாய்தளத்தில் (ramp) சிந்தடிக் மேட் விரிக்கப்பட்டது. மக்களை கவரும் விதமாக வண்ண விளக்குகள், கோபுரத்தின் மேல் தளத்தில் பாதுகாப்பிற்காக தரமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. எப்போதும் பாடல் மற்றும் இசை ஒலிக்கும் ஒலிப்பெருக்கிகள், சிசிடிவி கேமராக்கள், கோபுரத்தின் சுவர் முழுவதும் வண்ண ஓவியங்கள் என புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்ணா நகர் பூங்கா கோபுரம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இதற்கிடையே, இந்த பூங்காவை கடந்த வாரம் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார், ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா நகர் பூங்கா கோபுரம் நாளை (மார்ச் 20) திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனால் அண்ணா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி விக்டோரியா அரங்கை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகளும் நாளை தொடங்குகிறது. இதற்காக, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அயோத்தி' வெற்றி : தயாரிப்பாளர், இயக்குநருக்கு செயின் பரிசளித்த சசிகுமார்!