தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் பரப்புரை மேற்கொள்ளவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன.
இந்நிலையில் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்து தேர்தல் ஆணையம் புதிய உத்தரவொன்றினை இன்று (பிப்.2) பிறப்பித்துள்ளது.
இவையெல்லாம் தேவை: அதன்படி முகவர்கள் ஒன்றிய, மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
ஆணையம் வழங்குகின்ற அட்டையில் புகைப்படம் இருக்காது என்பதால், வாக்குச்சாவடி முகவரை அடையாளம் காண தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்தல் ஆணைய அடையாள அட்டையும், மத்திய, மாநில அரசுகளின் ஏதாவது ஒரு அடையாள அட்டையும் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
இந்த அடையாள அட்டையைக்காண்பித்தால் மட்டுமே முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம்