சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் தடையின்மை சான்றிதழையும் பெற வேண்டும் எனவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 92 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளிலும் குறைபாடுகள் இருக்கிறது. எனவே தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு பொறியியல் கல்லூரிகளின் தேர்வுகளுக்கு கேள்வித்தாள்கள் உருவாக்குதல், விடைத்தாள்கள் திருத்தம் செய்தல், பாடத்திட்டம் உருவாக்குதல் போன்ற அனைத்து பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து, தேர்வு முடிவுகளையும் வெளியிடும்.
ஆனால், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் உருவாக்குதல், தேர்வு நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல் போன்றவற்றை அந்தந்தக் கல்லூரிகளே மேற்கொள்ளும். இதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக மானிக்குழுவிற்கு விண்ணப்பம் செய்து அதன் அடிப்படையில் தன்னாட்சி அங்கீகாரத்தை பெற்று செயல்பட்டு வருகிறது.
தன்னாட்சி கல்லூரிகளில் மேற்கொள்ளும் நடைமுறைகளில் ஏதேனும் சந்தேகமோ அல்லது புகாரோ வந்தால் மட்டுமே, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்யும். மேலும், அண்ணாப் பல்கலைக்கழகம் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தேர்வின் முடிவுகளை வெளியிடுதல் மற்றும் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்களை வழங்கும் .
அண்ணா பல்கலைக்கழகத்தின் 267 ஆவது ஆட்சிமன்றக்குழு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதிகளில் மேற்காெள்ளப்பட்ட திருத்தத்திற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரிடமும், தமிழ்நாடு ஆளுநரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் படி தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு, அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை கல்லூரிகள் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தடையின்மை சான்றிதழும் பெற்று சமர்பிக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு செய்திடும் வகையிலான விதிமுறைகள் நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான வரம்பை உயர்த்தி நடவடிக்கை எடுத்ததுடன், மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், கல்வி பணியில் சராசரி அனுபவம், ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்ந்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்:
தன்னாட்சியை பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில், முதலாமாண்டு இளங்கலை படிப்பில் 60 சதவீத மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, இப்போது 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது அவசியம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனத்தின் h-Index குறியீடு 10ல் இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 70 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும். விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
மேலும் அனைத்து துறைகளிலும் ஆசிரியர் - மாணவர்கள் விகித அளவு என்பது 1:20 ஆக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆசிரியர்-மாணவர்கள் விகித அளவு என்பது 1:20 ஆக இருக்க வேண்டும். 75 சதவீத இளங்கலை படிப்புகளில் ஒரு பேராசிரியர், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 துணை பேராசிரியர்கள் (1:2:6) என இருக்க வேண்டும். ஒவ்வொரு தன்னாட்சி கல்லூரிகளிலும் நிர்வாக குழு, நிதி குழு, அகடமிக் குழு அமைக்கப்பட்டு முறையாக கூட்டப்பட வேண்டும். புதிய துறைகள் தொடங்கப்பட வேண்டும் எனில் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற வேண்டும்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 10 ஆண்டு அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாத தன்னாட்சி கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் புதிய விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446 கல்லூரிகளில் 92 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வுகள் முறையாக நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அனைத்தையும் கண்காணிக்கும் விதமாக புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாய் கண்ணீர் மல்க பேட்டி!