மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் 2019-20 ம் ஆண்டிற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வாரிய கூட்டம், கடந்த மே மாதம் 16 ந் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் முக்கிய விபரங்களை தெரிவித்தார். அதில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குவதற்கு 14417 என்ற கட்டணமில்லா எண் செயல்படுத்தப்படுகிறது. கல்வித்தகவல் மேலாண்மை மூலம் மாணவர்கள், பள்ளிகள் குறித்த புள்ளி விபரங்கள் பெறப்பட்டு, 2019-20 ம் கல்வியாண்டில் ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 33 சதவீத நடுநிலைப் பள்ளிகளில் பாடத்திற்கான ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். பள்ளி மேலாண்மைக்குழு அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் தொல்லை போன்றவை ஏற்படுகிறது. சமீபகாலமாக வரும் தகவல்களின் படி பள்ளி வளாகத்தில் கொலை, தாக்குதல் மற்றும் கற்பழிப்பு போன்றவை நடைபெறுகிறது. எனவே பள்ளியில் பாதுகாப்பு திட்டம் முக்கியமானதாக உள்ளது. அனைத்து மாணவர்களும் சுற்றுப்புற தூய்மை மற்றும் பாதுகாப்புடன் கல்வி கற்றால்தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியும். எனவே ஆசிரியர்கள் முதல் ஆலோசகராக இருக்க வேண்டும். மேலும் பள்ளியில் அவசரகால உதவி எண்களை எழுதி வைக்க வேண்டும்.
இந்த ஆண்டு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிக்கு 3,171 கோடியே 23 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. மாநில அரசு தனது பங்குத் தொகையாக 1,114 கோடியே 48 லட்சம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு புதியதாக 5 உண்டு உறைவிடப்பள்ளிகள் துவக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிப்பறை 1,475, மாணவிகள் கழிப்பறை 1849, கூடுதல் வகுப்பறைகள் 20, குடிநீர் வசதிகள் 46 பள்ளிக்கும், சுற்றுச்சுவர் 4,493 பள்ளிக்கும், சாய்வுத்தளம் மற்றும் கைப்பிடியுடன் 5,726 பள்ளிகளிலும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 தொடக்கப் பள்ளிகளில் சூரிய மின்சார வசதி ஏற்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் வரைகலை அறை, கம்ப்யூட்டர் ஆய்வகம், சூரிய மின்சார வசதி போன்றவை கூடுதலாக உருவாக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி தொடக்கக்கல்வி பயிலும் 30 லட்சத்து 35 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு இலவச சீருடையும், 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் 44,78,642 மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகமும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொடக்கப் பள்ளிகளுக்கான ஆண்டு பாராமரிப்பு மானியம் வழங்குவதற்கான நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 15 மாணவர்கள் மட்டுமே உள்ள 3008 பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாயும், 15 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 21,400 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரமும், 100 முதல் 250 மாணவர்கள் உள்ள 6,167 பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரமும், 251 முதல் 1000 வரை மாணவர்கள் உள்ள 714 பள்ளிக்கு தலா 75 ஆயிரமும், 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள 4 பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு பாராமரிப்பு மானியம் வழங்குவதற்கான நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 15 மாணவர்கள் உள்ள 5 பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாயும், 15 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 667 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 100 முதல் 250 மாணவர்கள் உள்ள 2152 பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், 251 முதல் 1000 வரை மாணவர்கள் உள்ள 2858 பள்ளிக்கு தலா 75 ஆயிரம் ரூபாயும், 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள 383 பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதியதாக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் தமிழக அரசு புதியப் பள்ளிகளை தொடங்க முடியும். மேலும் ஆசிரியர்களுக்கான சம்பளம் , பள்ளிக்கான செலவினம் போன்றவையும் மத்திய அரசின் நிதியுதவியுடன் தான் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.