தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், ஜிஎஸ்டி சாலையை எளிதாக கடக்கும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு ரூ.9 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பயணிகள் சென்று வர இந்த நடைமேம்பாலம் உதவியாக இருந்தது. இப்பாலத்தை ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி ரூ.10 கோடி மதிப்பில், ரயில் நிலையம் வரை நடைமேம்பாலம் நீட்டிக்கப்பட்டது. கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய பாலத்தை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், "நடைமேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்துக்குத் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இனி சாலையை எளிதாக கடந்து ரயில் நிலையத்துக்கு மக்கள் செல்ல முடியும். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகள் பழுது அடையாமல் இருக்க, தனி பணியாளர் நியமிக்கப்படுவார்" எனக் கூறினார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறும்போது, "தாம்பரம் ரயில் நிலையத்தை கிழக்கு தாம்பரம் பகுதியுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.120 கோடியில் புதிதாக நடைமேம்பாலம் அமைக்கப்படும். இப்பணிகள் விரைவில் தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க: சென்டர் மீடியனில் மோதி மாநகரப் பேருந்து விபத்து; 5 பயணிகள் காயம்