சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டுவரும் பல்வேறு துறைகளின் கோரிக்கையின்படி புதிய கட்டடங்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப திருவிக மண்டலத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு, மருத்துவமனை, பள்ளி, அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் முதலியவை கட்டப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் கீழ் 28 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், 12 இடங்களில் நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 31 இடங்களில் இரவு காப்பகங்கள், மூன்று இடங்களில் சமுதாயக் கூடங்கள், மூன்று இடங்களில் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் பிற கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ரூபாய் 18.24 கோடி மதிப்பில் 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், திருவெற்றியூரில் ஒரு நகர்ப்புற சமுதாய மையம் மற்றும் மூன்று இடங்களில் இரவு காப்பகங்களும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருவிக நகரில் 48 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுவரும் புதிய மண்டல அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தப் புதிய மண்டல அலுவலக கட்டடத்தில் பொறியியல் துறை, நகரமைப்பு பிரிவு, வருவாய் துறை, சுகாதாரத்துறை, திடக்கழிவு மேலாண்மை துறை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவு, சூரிய ஒளி சேகரிப்பு மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில், தற்போது கட்டட முகப்பு, நுழைவு வளைவு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என தெரிவித்துள்ளார்.